சி.என்.என். செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளர் சும்நிமா உதாஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 5 நாள் பயணமாக காத்மாண்டு சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மே 2 ம் தேதி காத்மாண்டு சென்ற அவர் அங்குள்ள மாரியாட் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். ராகுல் காந்தியின் நண்பர் சும்நிமா உதாஸின் தந்தை பீம் உதாஸ் மியான்மருக்கான முன்னாள் நேபாள தூதராக இருந்துள்ளார்.
மே 3 (நேற்று) திருமணம் மற்றும் மே 5 ல் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இவர்களின் அழைப்பின் பேரில் காத்மாண்டு சென்றுள்ள ராகுல் காந்தி, மே 2 இரவு காத்மாண்டுவில் புகழ்பெற்ற ‘லார்ட் ஆப் தி டிரிங்க்ஸ்’ எனும் இரவு விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இரவு விடுதியில் ராகுல் காந்தி அருகில் ஒரு பெண் நின்றுகொண்டிருக்க அவரிடம் ராகுல் காந்தி ஏதோ கேட்க, இதனை அவர்களுக்குத் தெரியாமல் படம் பிடித்த ஒருவர் அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார்.
ராகுல் காந்தியுடன் பேசிக் கொண்டிருந்தது நேபாளத்திற்கான சீன தூதரர் ஹௌ யாக்கி என்றும் சீன தூதருடன் இரவு விடுதியில் ராகுல் காந்திக்கு என்ன பேச்சு என்றும் சமூக வலைத்தளங்கள் நேற்று முழுவதும் பரபரத்தது.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் வேறு மாநிலத்தில் சென்றாலே சீனர்கள் என்று தவறுதலாக நினைக்கும் நிலையில் சீன மொபைல்கள் மூலம் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட தகவல் குறித்த உண்மையை கண்டறிய இந்தியா டுடே செய்தி நிறுவனம் முயற்சி செய்திருக்கிறது.
சீன தூதரர் ஹௌ யாக்கி புகைப்படத்துடன் இரவு விருந்தில் கலந்து கொண்ட பெண்ணின் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டும் வெவ்வேறு நபர்கள் என்று உறுதியானதைத் தொடர்ந்து இதுகுறித்து மேலும் விசாரணையை தொடங்கியது அந்தக் குழு.
‘லார்ட் ஆப் தி டிரிங்க்ஸ்’ விடுதி செயல் அதிகாரி ரபின் ஷ்ரேஸ்தா-வை தொடர்பு கொண்ட செய்தி நிறுவனத்திற்கு, மே 2 இரவு ராகுல் காந்தி தங்கள் விடுதிக்கு வந்ததாகவும் அவர் அங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், சீன தூதரோ, தூதரக அதிகாரிகளோ யாரும் அன்றைய இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று உறுதிபட கூறினார்.
தவிர, ராகுல் காந்தி கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில் மணப்பெண் சும்நிமா உதாஸின் தோழிகளும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்று கூறிய அவர் அந்த வீடியோவில் உள்ள பெண் குறித்து கேட்டதற்கு அவர் மணப்பெண்ணின் தோழி என்பதை உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, காத்மாண்டு போஸ்ட் பத்திரிகையைச் சேர்ந்த அணில் கிரி-யை தொடர்பு கொண்டபோது, “ராகுல் காந்தி அந்த இரவு விடுதிக்கு சென்றது உண்மை, அதில் திருமண வீட்டார் பலரும் கலந்து கொண்டனர், சீன தூதர் கலந்துகொள்ளவில்லை, அந்த வீடியோவில் இருந்தது மணமகளின் தோழி தான்” என்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீன தூதரக அதிகாரிகளுக்கும் இ-மெயில் அனுப்பியுள்ள இந்தியா டுடே அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில், சீன தூதருடன் ராகுல் காந்தி இரவு விருந்தில் கலந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவது திட்டமிட்ட வதந்தி என்று உறுதியாகியுள்ளது.
5 நாள் பயணமாக நேபாள் தலைநகர் காத்மாண்டு சென்றார் ராகுல் காந்தி