கொழும்பு: இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் – முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தல்
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிருத்து வருகிறது. விலைவாசிகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே அரசுகளின் தவறான கொள்கை மற்றும் நிர்வாக திறமையின்மை காரணமாக நாடு வரலாறுகாணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். ஆனால், மகிந்த ராஜபக்சே, பதவி விலக மறுத்து வருகிறார். தான் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும், பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அறிவித்தார். இதனால் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.
இதையடுத்து, இலங்கை எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னாள் அதிபர் மைத்திரி சிறிசேனா தலைமையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து, மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தினார். அதை கோத்தபய ஏற்றுக்கொண்டதாக மைத்திரி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் 4ந்தேதி (புதன்கிழமை) கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என அந்நாட்டு முன்னாள் அதிபரான மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற மே தின விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சிக்கலில் இருந்து மீள்வதற்கு மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.