ஹரியானா மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமான மனிசர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் இரண்டு வார காலத்திற்கும் மேலாக தொடரும் மின் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன, தொடரும் மின் நெருக்கடியால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீர் கூட கிடைக்காமல் டேங்கர்களை நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் 8 – 10 மணி நேரம் திட்டமிட்ட மின்வெட்டு தவிர பகல் நேரங்களில் அடிக்கடி 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை திட்டமிடப்படாத திடீர் மின்வெட்டுகள் தொழில்துறையை குறிப்பாக MSME களை வெகுவாக பாதித்துள்ளது என்று மனிசர் தொழில்கள் நலத்துறையின் பொதுச் செயலாளர் மன்மோகன் கெய்ன்ட் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியுள்ளார்.
மேலும், “கடந்த நான்கு – ஐந்து ஆண்டுகளாக மின் விநியோகம் சிறப்பாக இருந்தது, ஆனால் கடந்த இரண்டு – மூன்று வாரங்களாக மின் நெருக்கடி மிகவும் மோசமாக உள்ளது. இதுபோன்ற ஒரு மின் நெருக்கடியை மனிசர் முன்னெப்போதும் கண்டதில்லை” என்றும் கூறினார்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக டீசல் ஜெனரேட்டர்களை இயக்குவது கடினமாகியுள்ளது, டீசல் விலை ரூ. 100 ஐ தொட்டுள்ள நிலையில், பல மணிநேரம் ஜெனரேட்டர்களை இயக்குவது தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிசாரில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “நாளொன்றுக்கு சராசரியாக மூன்று மணிநேரம் ஜெனெரேட்டரை இயக்குவதாக” கூறினார். மேலும், “எங்களது சிரமம் குறித்து யாரும் காது கொடுத்து கேட்பதில்லை, அதனால் அவர்களிடம் சொல்லியும் பயனில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
நீண்ட நேரம் மின்வெட்டு நிலவி வருவதால், மானேசரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் டேங்கர் மூலம் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். நீர் இறைக்கும் நிலையத்திற்கு அருகாமையில் உள்ளவர்கள் தவிர தொலைவில் உள்ளவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பஹதுர்கர் வர்த்தக மற்றும் தொழில்துறையின் துணைத் தலைவர் நரிந்தர் சிகாரா கூறுகையில், ஜஜ்ஜரின் பஹதுர்கர் பகுதியிலும் நிலைமை வேறுபட்டதல்ல, மேலும் ஒரு நாளைக்கு 6-7 மணிநேரம் மட்டுமே மின் விநியோகம் செய்யப்படுவதால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்து வருவதாகவும், ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஹரியானாவின் முக்கிய தொழில் நகரமான பஹதுர்கரில், காலணி, ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள் மற்றும் தொழில்துறை உற்பத்தி அலகுகள் உட்பட சுமார் 9,000 MSMEகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 7.5 லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.
ஹரியானா மாநிலம் 10 நாட்களில் 1,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறும் என அரியானா மின்துறை அமைச்சர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். தற்போது பானிபட்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அலகுகளும், கேதாரில் தலா 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளும், யமுனாநகரில் தலா 300 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளும் இயங்கி வருவதாக அவர் கூறினார்.
மேலும், அதானி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 1,400 மெகாவாட் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதானியில் இருந்து 1,000 மெகாவாட், சத்தீஸ்கரில் இருந்து 350 மெகாவாட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து 150 மெகாவாட் கூடுதல் மின்சாரம் எடுக்கப்படும் என்றும் திரு. சிங் கூறினார். தேவைப்பட்டால், சந்தையில் இருந்து கூடுதல் மின்சாரம் ஏற்பாடு செய்யப்படும், இதன்மூலம் ‘பீக் ஹவர்’ஸில் கூட மின்சாரம் தட்டுப்பாடு இருக்காது என்று திரு. சிங் கூறியுள்ளார்.