சென்னை:  பிரேசில் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள் 6 பேருக்க தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

24வது கோடைகால செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்-2022  போட்டி பிரேசில்  கேசியாஸ் டோசுல் என்ற நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது வரும்  மே மாதம் 1ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் தமிழ்நாட்டை சார்ந்த வீரர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி, நீச்சல் வீராங்கனை ஆர்.சினேகா, தடகள வீராங்கனை சமீகா பர்வீன் முஜிப், இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின், டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர், தடகள வீரர்கள் மணிகண்டன் மற்றும் சுதன்ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன்  டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் மூர்த்தி, முதன்மை டென்னிஸ் பயிற்சியாளர் ஸ்டாலின், நீச்சல் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் பிரேசில் செல்கின்றனர்.

போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வருகிற 29ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு பிரேசில் செல்கிறது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் அனைவரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.