மாணவர் மட்டுமே தங்கக்கூடிய விடுதியில் தங்கிப்படிக்கிறார் அசோக் செல்வன். அந்த விடுதியின் பொறுப்பாளர், ஸ்டிரிக்டான நாசர். காவலாளி ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ். இவர் அடிக்கடி மாணவர்களை, நாசரிடம் போட்டுக்கொடுப்பார்.
அங்கு ஒரு நாள் இரவு மட்டும் தங்க அனுமதித்தால் பணம் தருகிறேன் என ப்ரியா பவானி சங்கர் சொல்ல, பணச்சிக்கலில் தவிக்கும் அசோக் செல்வன் சம்மதிக்கிறார்.
விடிவதற்குள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று அங்கு செல்கிறார் ப்ரியா.
ஆனால் நினைத்தபடி அவரால் திரும்பிச் செல்ல முடியவில்லை. விடுதிப் பொறுப்பாளர் நாசரோ, காவலாளி ராம்தாஸோ, இதர மாணவர்களோ பார்த்துவிடக்கூடிய சூழல்.
அசோக் செல்வனும் அவரது நண்பர்களும் ப்ரியாவை யாருக்கும் தெரியாமல் வெளியேற்ற ஏதேதோ செய்கிறார்கள். அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா என்பதுதான் கதை.
இடையில், பர்வீன் என்கிற பேய் வேறு ரகளை செய்கிறது. ப்ரியாவும் பர்தா போட்டு அலைய பேயும் பர்தா போட்டு உலவ.. ஏக கலாட்டா.
நடனம் நடிப்பு என அசோக் செல்வன் அசத்தி இருக்கிறார். ப்ரியாபவானி சங்கர் வழக்கமான நாயகி. நண்பர்களாக வரும் சதீஷ், நாசர், ராம்தாஸ் ஆகியோர் கூட்டணி சில சமயங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
படத்துக்கு பெரிய பலம், ரவிமரியா. வழக்கமான ‘சவுண்ட்’ஆன நடிப்பு என்றாலும் வழக்கம்போலவே ரசிக்க வைக்கிறார். அதுவும் பேயிடம் அடிபடும் காட்சியில் அசத்தி இருக்கிறார். (மனிதருக்கு எங்கெங்கு காயமோ பாவம்!)
கண்டிப்பான விடுதி பொறுப்பாளர் என வரும் நாசர் சீரியஸாக பேசுவதெல்லாம் நகைச்சுவைதான். அவரது உதவியாளர் – காவலாளி ராம்தாஸ் அசத்துகிறார்.
ஒரே கதைக்களம் என்றாலும் போரடிக்காமல கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். பாடல்களை ரீமேக் செய்வார்கள். இந்தப் படத்தில் பின்னணி இசையை ரீ மேக் செய்திருக்கிறார், ‘போபோ’ சசி. ரசிக்கவைக்கிறது.
அதே போல ஒளிப்பதிவாளர் ப்ரவீன் குமார், தனது சிறப்பான ஒளிப்பதிவால் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
கல்யாண ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட பர்வீன், பர்தாவோடு பேயாக அலைய.. இறுதிக் காட்சியில் பாதிரியார் மற்றும் விடுதிக் காப்பாளரான நாசரை அடித்துத் துவைக்கும் காட்சியில் திரையரங்கம் அதிர்கிறது.
ரொம்ப யோசிக்காமல் ஜாலியாக பார்க்கலாம்! படம் பார்க்க வரும் ரசிகர்களை மகிழ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படம் எடுத்திருக்கும் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் அதில் வெற்றி அடைந்துள்ளார்.