சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது இந்நிலையில், மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
தேரினை இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்படதாக கூறப்படுகிறது. மேலும், களிமேட்டில் தேர் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு செல்கிறார்.
இந்த நிலையில், தேர்விபத்து குறித்து சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து பேசிய மமுதலமைச்சர் முக ஸ்டாலின், தஞ்சாவூர் அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவில் பவனி வீதி உலாவின் போது இன்று அதிகாலை 3.10 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் தேரோட்டம் முடிந்து, தேரினை திருப்ப முற்பட்டபோது தேர் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் சம்பவ இடத்திலேயே மோகன், பிரபாத், ராகவன், அன்பழகன், நாகராஜ், சந்தோஷ், செல்வம், ராஜ்குமார், சாமிநாதன், கோவிந்தராஜ், பரணி ஆகியன 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்துள்ள 16 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் அளிப்பதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் இப்பணிகளை மேற்பார்வையிடவும், துரிதப்படுத்திடவும் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் பிரதிநிகளும், அரசு உயர் அலுவலர்களும் சம்பா இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சத்தை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று நான் நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், காயமடந்தை சிகிச்சை பெறுவோர்களையும் சந்திக்க இருக்கிறேன் என தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில் பேரவையில் இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றி தருமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதில், மிகுந்த துயரமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்