மங்களூர்:  கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் தர்கா ஒன்று புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அதனுள் இந்து கோயில் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹிஜாப் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தற்போது தர்காவுக்குள் இந்து கோவில் அமைந்துள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டம் மலாலி பகுதியில்  உள்ள தர்காவை உடைத்து புதுப்பிக்கும் பணிகளை தர்கா நிர்வாகிகள் மேற்கொண்டனர். அப்போது அதனுள் இந்து கோயில் கட்டட அமைப்பு தென்பட்டுள்ளது. இதைக்கண்ட அந்த பகுதிமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த, காவல்துறையினர் மற்றும் தாசில்தார், தர்காவின் புதுப்பிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த, மங்களூர் நகர காவல் ஆணையர் சசிகுமார், “தர்காவில் இந்து கோயில் கட்டட அமைப்பு இருப்பதை அறிந்ததும், அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும் வகையில், தர்காவை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது தர்காவின் ஆவணங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள இந்து-முஸ்லிம் சமூகத்தினர் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தர்கா சீரமைப்பு பணியை சில காலங்களுக்கு நிறுத்த தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இடத்தில், சமண அல்லது இந்து சமயத்திற்குச் சொந்தமான கோயில் ஒன்று முற்காலத்தில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. தற்போது சீரமைப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல மசூதிகள், தர்காக்கள், இந்துக்கோவில்களை இடித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், மங்களூரில் இந்து கோவிலை இடித்து தர்கா எழுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.