டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வெகுவாக குறைந்து வந்த தொற்று பரவல் கடந்த ஒருவாரமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து டெல்லி, உ.பி. உள்பட குறிப்பிட்ட 5 மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளதுடன், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடு நெரிமுறைகளை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அதில், இனி வரும் காலங்களில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக  டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கலந்து கொண்டு பேசியபோது,  நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மக்கள் பீதியடைய தேவையில்லை என்று தெரிவித்ததுடன்,  டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் முகக்கவசம் அணிந்து கொள்வது அவரவர் விருப்பம் என பேசியது குறிப்பிடத்தக்கது.