மும்பை:
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியும், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றன.
பஞ்சாப் – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவரில் 151 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹைதராபாத் பந்துவீச்சில் உம்ரான் 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 28 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். புவனேஷ்வர் 3, நடராஜன், சுசித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 8.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து வென்றது. ஐபிஎல் தொடரில் 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை சன்ரைசர்ஸ் வேகம் புவனேஷ்வர் குமாருக்கு கிடைத்துள்ளது.
சென்னை- குஜராத் அணிகள் இடையே நடந்த மற்றொரு போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசியது. இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. 170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி 19. 5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.