2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை தயார் படுத்த தேவையான திட்டங்கள் குறித்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருடன் நேற்று ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஜன்பத் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 370 – 400 சீட்டுகளை இலக்காக கொண்டு செயல்பட தேவையான வியூகம் குறித்து பிரஷாந்த் கிஷோர் பேசியதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்குப் பிறகு பிரஷாந்த் கிஷோர் அளித்த ஆலோசனைகள் குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததாக தெரிகிறது.
காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற பிரஷாந்த் கிஷோர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுவதை அடுத்து அவரை கட்சியில் முறையாக சேருமாறு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தனக்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காங்கிரஸில் சேரத் தயாராக இருப்பதாக அந்தக் கூட்டத்தில் கிஷோர் கூறியதாகவும், ஆனால் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த தனது வியூகத்தை இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக சில தலைவர்கள் கூறினர்.
காங்கிரஸ் கட்சி தனது தொடர் தோல்விகளில் இருந்து மீள்வதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பல்வேறு தரப்பினர்களின் ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் கேட்டு வரும் நிலையில் பிரஷாந்த் கிஷோருடனான இந்த சந்திப்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.