சண்டிகர்: பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம்ஆத்மி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனது எம்.பி.பதவிக்கான சம்பளத்தை ஏழை விவசாயி மகள்களின் கல்விக்காக வழங்குவேன் என அறிவித்து உள்ளார்.
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு ஆம்ஆத்மி அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவதுடன், ஜூலை முதல் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என்றும் அறிவித்து உள்ளது.
இதற்கிடையில், பஞ்சாப் மாநிலத்தில் காலியாக இருந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்பட 5 பேர் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, ஹர்பஜன் சிங் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், தனது ராஜ்யசபா உறுப்பினருக்கான சம்பளத்தை ஏழை விவசாயிகளின் மகள்களின் கல்வி நலனுக்காக செலவிட விரும்புகிறேன். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நான் வந்துள்ளேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த் என கூறியுள்ளார்.