சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்தமான கார் ஒன்று நள்ளிரவில் தீபிடித்து எரிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காரை விற்று நகை வாங்கித்தரும்படி மனைவி நச்சரித்ததால் சொந்த காருக்கு தீ வைத்து நாடகமாடியதாக பாஜக மாவட்ட செயலாளரை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் சதிஷ்குமார். இவர் கோயம்பேடு அருகே மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1வது தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு கார்கள் உள்ளன.
சம்பவத்தன்று இரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், காரில் வந்த பெண் மற்றும் ஆண் இருவரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு செல்வது போல தெரிந்தது. ஆனால் அந்த பகுதிகளில் உள்ள மற்ற கண்காணிப்பு காமிராக்களை யும் ஆய்வு செய்தபோது, மற்றொரு காரில் வந்தது சதிஷ்குமார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரவு நேரததில், அவர் தனது கார் மீது பெட்ரோல் ஊற்றுவதும் அதை கண்டு அவரது மகள் ஓடி வந்து தடுப்பதும் தெளிவாக பதிவாகி இருந்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பி செல்லும் சதிஷ்குமார் மீண்டும் சிறிது நேரம் கழித்து வந்து காரை தீ வைத்து கொளுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர், சதிஷ்குமாரை கைது செய்து நடத்திய விசாரணையில், காரை தீயிட்டு கொளுத்தியது தான்தான் என்று ஒப்புக்கொண்டார். தனது மனைவி நகை வாங்கி தரும்படி கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவித்தவர், பணம் இல்லை என்றால் காரை விற்று நகை வாங்கித்தா என்று அடம்பிடித்ததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதற்காக ஆத்திரத்தில் காருக்கு தீ வைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சதிஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285-ன் கீழ் (தீப்பற்றக்கூடிய பொருட்களை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே மெத்தனமாக கையாளுதல்) வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை எச்சரிக்கை செய்து ஜாமினில் விடுவித்தனர்.