கும்பகோணம்: இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் அனுமதி கிடைக்கும் என கூறியுள்ள தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், ஹஜ் விஷயத்தில் யாரும் அரசியல் வேண்டாம் என்று கூறியதுடன், சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.
கும்பகோணத்தில் ரமலான் பெருவிழாவை முன்னிட்டு 3 ஆயிரம் ஏழை இஸ்லாமியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி யில் ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கலந்து கொண்டு, மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் முன்னிலையில் நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் இருந்து நேரடியாக செல்ல விமான சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த வாரம் அதற்குரிய அனுமதி கிடைத்துவிடும் என்வர், கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்த வருடம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். வருகிற 22–-ந் தேதி வரை ஹஜ் பயணம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
ஹஜ் விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று வலியுறத்தியவர், இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரும் நமக்கு தொப்புள் கொடி உறவுகள் எனவும் தெரிவித்தார்.