டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது தலைநகரில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி மற்றும் அஜய் மாக்கன் உள்பட மூத்த தலைவர்களுடன் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக, காந்தி குடும்பத்தினரை பிரசாந்த் கிஷோர் அதிக முறை சந்தித்ததாகவும், கட்சியில் இணைவது பற்றி பேச்சுகள் நடைபெற்று வந்ததாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில், விரைவில், செயற்குழுக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின. இதற்காக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என பேசப்பட்டு வருகிறது. ஆனால், மம்தா பானர்ஜி காங்கிரஸ் தவிரத்து, மற்ற எதிர்க்கட்சிகள் தனது தலைமையில் உருவாக வேண்டும் என விரும்புகிறார். அதுபோல, தெலுங்கான, தமிழக முதல்வர்கள், தங்களது தலைமையில் எதிர்க்கட்சிகள் அணி சேர வேண்டும் என எதிர்பார்கின்றனர். அல்லது காங்கிரஸ் தலைமையில் அணி சேர வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரன பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவைத் தொடர்ந்து சில கருத்துக்களை தெரிவித்திருந் தார். அப்போது, காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக நான் அதிகம் பேச்சுவார்த்தை நடத்தினேன். கடந்த 2017 உ.பி. தேர்தலில் நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மோசமான அனுபவமாக இருந்தது. அதனால் நான் கூடுதல் சந்தேகங்கள் ஏற்பட்டன. என் கைகளைக் கட்டியிருப்பதை நான் விரும்பவில்லை. காங்கிரஸ் மறுதொடக்கம் எனது பின்னணி கருத்தில் கொண்டு நான் 100% அவர்களுக்கு உண்மையாக இருப்பேனா என்று காங்கிரஸ் தலைமை சந்தேகம் கொண்டதிலும் கூட நியாயம் இருக்கவே செய்கிறது. ஆனால், இதையெல்லாம் தாண்டி நான் காங்கிரஸ் கட்சியில் இணையவே இருந்தேன் என்று தெரிவித்திருந்ததுடன், 90% விஷயங்களில் எங்கள் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறியிருந்தார்.
மேலும், நான் காங்கிரஸைப் உண்மையாகவே முக்கியமானதாகப் பார்க்கிறேன். அவர்கள் இல்லாமல் எதிர்க்கட்சி என்பது சாத்தியமில்லை. ஆனால், இதற்கு தற்போதைய தலைமையின் கீழ் இருக்கும் அதே காங்கிரஸாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியை நாம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இப்போது இருக்கும் எதிர்க்கட்சிகளை வைத்துக் கொண்டு பாஜகவை வீழ்த்துவது சந்தேகம் தான் என்று கூறியதுடன், சித்தாந்த ரீதியாகக் காங்கிரஸ் பலவீனமடைய நாம் அனுமதிக்கக் கூடாது. அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. பாஜகவை எதிர்கொள்ள நம் நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை என கூறியிருந்தார்.
இந்த நிலையில், கிஷோர் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசியிருப்பது, அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.