சென்னை: சென்னை தீவுத்திடலில் இன்று மாலை ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சென்னையில் இன்று ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடலில் அதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று மாலை திருமண வைபம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவர் சேகர் ரெட்டி, ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவத்துக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், திருக்கல்யாண வைபவத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அவர்களுக்கு திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட லட்டு பிரசாதம், ஆப்பிள், தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக 3000 காவல்துறையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 15 தீயணைப்பு வாகனங்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளதாகவும் கூறினார்.