சென்னை: ரேசன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பால்வளத்துறையில் பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாணமை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம்), மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின்அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாசர், அனிதா ராதாகிருருஷ்ணன் ஆகியோர் பதிலளித்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த கொள்கை வளிக்க குறிப்போது வெளியிடப்பட்டது.
அதில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் அதிகரித்தித்துள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, 2017-18 ஆம் ஆண்டு 11.91 லட்சம் லிட்டராகவும், 2018-19 12.09 லட்சம் லிட்டராகவும், 2019-20 12.11 லட்சம் லிட்டரும், 2020-21- 12.63 லட்சம் லிட்டராக இருந்த நாளொன்றுக்கு விற்பனை ஆகி வந்தது. இந்த நிலையில் 2021-22 ஆம் ஆண்டில் 13.36 லட்சம் லிட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாவும் தெரிவித்துள்ளது.
2021-22ம் ஆண்டில் சென்னை பெருநகர பால் விற்பனை சராசரியாக நாள் ஒன்றுக்கு 13.36 லட்சம் லிட்டராக உள்ளதாகவும், மேலும் 2022-23ம் ஆண்டில் 15 லட்சம் லிட்டராக விற்பனையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, பால் வளத் துறையில் 36 புதிய அறிவிப்புகளை அமைச்சர் நாசர் வெளியிட்டார். அதன்படி ,
இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
அச்சரப்பாக்கத்தில் நாள்தோறும் இரண்டு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உடைய பால்பண்ணை 71.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தூய பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 50 எண்ணிக்கையில் தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாள்தோறும் இரண்டு லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்
தரமதிப்பினை கூட்டவும், பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை கூட்டவும், ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் ஒன்றியம் அதிவெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட UHT பால் மற்றும் நறுமண பால் டெட்ரா பாக்கெட்டுகளுக்கு ஏற்றுமதி உரிமம் பெற்றுள்ளது.
ஈரோடு ஒன்றியம் நெய் ஏற்றுமதிக்கான உரிமம் பெற்றுள்ளது.
திருவண்ணாமலை பால் மற்றும் பால் பவுடர் ஆலை, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் மற்றும் நெய் ஏற்றுமதிக்கான் உரிமம் பெற்றுள்ளது.
சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் மற்றும் துபாய் போன்ற அயல் நாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறது. இதர வெளிநாடுகளுக்கும் பால் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை வெளிநாடுகளுக்கு ரூ.355.30 லட்சம் மதிப்பிலான 7,15,476 லிட்டர் பால் மற்றும் ரூ.115.39 லட்சம் மதிப்பிலான நெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.0.99 லட்சம் மதிப்பிலான 1,107 லிட்டர் நறுமணப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆவின் பொருட்களை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விற்பனை செய்வதற்கான மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன உத்தரவையும், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மன், ஓமன், கத்தார், கனடா மற்றும் அமெரிக்கா (கலிபோர்னியா) ஆகிய வெளிநாடுகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்வதற்கு வணிக ஏற்றுமதியாளர்களுக்கான வணிக ஒப்பந்த ஆணைகளையும் வழங்கியுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.