ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் இன்று மதியம் சில மணி நேரம் செயலிழந்தது.
வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் இந்தியாவின் இரண்டு பெரும் நிறுவனங்களின் செயலியும் ஒரே நேரத்தில் செயலிழந்ததால் பலரும் மதிய உணவுக்காக அல்லாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர், இதனைத் தொடர்ந்து ஜொமோட்டோ நிறுவனம் தனது செயலி செயலிழந்ததாக குறிப்பிட்டுள்ளது.
ஜொமோட்டோவைத் தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனமும் தனது செயலி செயலிழந்ததாக கூறியதோடு அதை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறியது.
வாடிக்கையாளர்களுக்கு சலுகை தருவதாக கூறி உணவக உரிமையாளர்களிடம் இருந்து பெரும் தொகையை கமிஷனாக பெற்று கொழுத்து வரும் இந்த நிறுவனங்கள் மீது இந்திய தேசிய உணவக சங்கம் (NRAI) கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் கார்போரேட் நிறுவனங்களின் போட்டி ஒழுங்குமுறை ஆணையமான சி.சி.ஐ. (காம்படீஷன் கமிஷன் ஆப் இந்தியா) இடம் இந்திய தேசிய உணவக சங்கம் (NRAI) அளித்த புகார் மீது விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.