திருச்சி: சொத்து வரி உயர்வு எதிர்த்து இன்று அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு மீது இபிஎஸ், ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினர். “குடும்பத்தை பற்றி தான் முதல்வருக்கு கவலை” எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், மக்கள் விரோத அரசாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என ஓபிஎஸ்-சும் விமர்சித்துள்ளனர்.
தமிழகத்தில் 25 சதவிகிதம் முதல் 150சதவிகிதம் வரை சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி இன்று மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்று நடத்தினார். அதேபோல திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று நடத்தினார்.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓபிஎஸ், நாட்டின் பொருளா தாரம் இன்று அதல பாதாளத்தில் இருக்கிறது என்று நிதிநிலை அறிக்கை கூறுகிறது. வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை குறையவில்லை. கடல் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திமுக அரசு மீண்டும் வரியை உயர்த்தி மக்களை வதைக்கிறது. திமுக அரசின் நடவடிக்கையைக் கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கண்ணீர் திமுக அரசைப் படுபாதாளத்தில் கொண்டுபோய் தள்ளும். மக்களின் கண்ணீருக்கு திமுக பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் என்று கூறியவர் திமுகஅரசு மக்கள் விரோத அரசாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, நாங்கள் வந்தால் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். வீதி வீதியாகச் சென்று பொய் கூறினார்கள். அப்படி செய்தார்களா, இல்லை. ஸ்டாலின் வரப்போறாரு விடியல் தர போறாரு என்று வீதி வீதியாகச் சொன்னார்கள். ஆனால் எந்த விடியலும் வரவில்லை மக்களை வாட்டி வதைக்க வரியைத் தான் அவர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு சொத்து வரியை உயர்த்திய போது அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். 2019ஆம் ஆண்டு மக்களின் நலன்கருதி அதனை அதிமுக அரசு திரும்பப் பெற்றது. இந்தச் சூழலில் ஸ்டாலின் சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும்” என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.
திருச்சி ஜங்சன் பகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ சொத்து வரி உயர்வால் மாதம் 1000 ரூபாய் கொடுத்து வசித்துவந்த வாடகை வீட்டுக்காரர்கள் இனி மாதம் மாதம் 2500 ரூபாய் வாடகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று விமர்சித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறன் இல்லை என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி ,திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் எனக் கூறிவிட்டு இப்போது அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியதுடன், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக கைவிட்டு விட்டது, மக்களைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கஜானாவை நிரப்புவதிலேயே, அதாவது எதிலெல்லாம் வருமானம் வருகிறதோ அதை மட்டுமே ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இந்த பத்து மாத திமுக ஆட்சியில் ஸ்டாலின் செய்த சாதனை இதுதான். இதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறார்.
ஊடகங்களும் பத்திரிகைகளும் திமுக அரசை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த விளம்பரம் இல்லை என்றால் திமுக எங்கு இருக்கிறது என்றே தெரியாது என்று கூறிய எடப்பாடி, முதல்வர் ஸ்டாலினுக்கு அவரைப்பற்றி விளம்பரம் வந்தால் மட்டும் போதும். மக்களைப் பற்றி எல்லாம் கவலைப் படுவதில்லை.
டீ கடைக்கு இவர் மட்டும் தான் சென்று டீ குடித்திருக்கிறாரா?. நாமெல்லாம் டீ கடைக்குச் சென்று டீ குடித்தது இல்லையா. இங்கு மட்டுமல்ல வெளிநாடு சென்றாலும் டெல்லி சென்றாலும் வாக்கிங் போகிறார். அதுபோன்று இவர் பளு தூக்குகிறார். இவரை அடுத்த உலக போட்டிக்கு அனுப்பி விடலாம். இது எல்லாம் அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் இதை எல்லாம் புகைப்படம் எடுத்து பத்திரிகைகளிடம் கொடுத்து விளம்பரம் தேடுகிறார்.
மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் செய்வது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது திமுக தான்” என்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “பொது மக்களின் கஷ்டத்தைக் கண்டுகொள்ளாமல் மக்கள் மீது வரி செலுத்தியுள்ளனர். இனி வரும் நாட்களில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளை மக்களுக்கு திமுக அரசு கொடுக்க இருக்கிறது. கடந்த ஆட்சியில் மக்கள் மீது எந்த வித வரியும் செலுத்தாமல் அக்கறையோடு செயல்பட்டது அதிமுக. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன” என்றார்.