சென்னை: சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.
சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற சம்பவவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சவுந்தரராஜன் சென்னை வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் கொண்டு வந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்பிளனமேடு காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது கொலையாளிகள் ஆட்டோவில் தப்பி சென்ற காட்சி பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில் சவுந்தராஜன் கொலை சம்பவம் காரணமாக, அதிமுக பிரமுகர் கணேசன், தினேஷ்குமார், ப்ளூட்டி என்ற கார்த்தி, குமரேசன், இன்பம் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் இன்று காலை சரணடைந்தனர்.
விசாரணையில், பிராட்வே பேருந்து நிலையத்தில் இதற்கு முன்பாக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது சவுந்தரராஜன் அதிமுகவில் இருந்ததாகவும், பின்னர், அங்கிருந்து விலகி, திமுகவில் இணைந்த பிறகு, திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார்.
இதனால், அதிமுக பிரமுகர் கணேஷனுக்கும், சவுந்தரராஜனுக்கும் மோதல் இருந்து வந்த நிலையில், இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது.