சென்னை: சென்னையில் 1600 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் இன்று 27வது மெகா தடுப்பூசி முகாம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் வருகை தந்து தடுப்பூசி எடுத்துச்செல்கின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் முகக்கவசம் அணிவது நல்லது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக இருப்பதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து வருகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று 27வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 1600 முகாம்கள் உள்பட தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தமிழகத்தில் இதுவரை 10 கோடியே 17 லட்சத்து 30 ஆயிரத்து 611 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1 கோடியே 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 49 லட்சத்து 85 ஆயிரத்து 599 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.