மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எப்.பி அஃக்ரோ நிறுவனம் கலால் வரி தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அதை சமாளிக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திர நிதி அளிக்க திட்டமிட்டிருக்கிறது.
இது தொடர்பாக இந்திய பங்குச் சந்தைக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் 2022-23 நிதி ஆண்டில் ரூ. 40 கோடிக்கு தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க நிறுவனத்தின் இயக்குனர்கள் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 2021 அக்டோபர் மாதம் இதேபோல் கலால் வரி தொடர்பான பிரச்சனையை சமாளிக்க 2021-22 நிதியாண்டில் 25 கோடி ரூபாய்க்கு நிதி அளிக்கப்போவதாக நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக இந்திய பங்குச் சந்தைக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.
3 சியர்ஸ், ப்ளூ லகூன் உள்ளிட்ட மதுவகைகளை தயாரிக்கும் ஐ.எப்.பி அஃக்ரோ நிறுவனத்தின் நூர்பூர் மதுஆலையில் 2020 ம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த தாக்குதல் காரணமாக அந்த ஆலை இரண்டு வாரங்கள் மூடப்பட்டது.
கலால் துறையினரின் விதிமீறல்கள் குறித்து மேற்கு வங்க முதல்வரிடம் அப்போது முறையிட்டும் இதுவரை இந்த வன்முறை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இருந்தபோதும் இது மாநில கலால் துறையா அல்லது மத்திய கலால் துறையா என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் 2022-23 ம் நிதியாண்டில் 40 கோடி ரூபாயை அரசியல் கட்சிகளுக்காக ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து 2021-22 ம் நிதியாண்டில் ரூ. 25 கோடி வழங்கியதற்கான கணக்கை வருமான வரித்துறையில் தாக்கல் செய்யும் போது கலால் வரி நெருக்குதல் மூலம் லாபமடைந்த கட்சி தொடர்பான முழு விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.