சென்னை: கோவை அடுத்த பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக திமுக போட்டி வேட்பாளர் வனிதா என்பவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு தேர்வு சான்றிதழை உடனே வழங்கு தேர்தல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்ற நிலையில், மார்ச் 4ந்தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைமை பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றன. இதில் பல இடங்களில் குளறுபடிகள் நடைபெற்றன. திமுக வேட்பாளரை எதிர்த்தும், கூட்டணிகட்சி வேட்பாளர்களை  எதிர்த்தும் திமுகவினரே போட்டியிட்டு வெற்றிபெற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் திமுக தலைமை எச்சரிக்கையை தொடர்ந்து பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையில், பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தேர்தலில் 15 வார்டுகளையும் தி.மு.க. கைப்பற்றிய நிலையில், அங்கு தலைவர் பதவியை பிடிக்க நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக தலைமை அறிவித்த நபரான ராகினி என்பவரை எதிர்த்து, போட்டி வேட்பாளராக வனிதா என்பவர் களமிறங்கினார். இதனால், அன்றைய கூட்டம் கலவரமாக நடைபெற்று முடிந்தது. இதில், வனிதா, 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றபோதும், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட ராகினி 7 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்த தேர்தலில் வனிதா வெற்றி பெற்ற நிலையில், ஆளுங்கட்சியின் மிரட்டல் காரணமாக, ராகினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து கூட்டரங்குக்குள் சென்ற  ராகினியின் தந்தை ஆறுச்சாமி என்பவர் அங்கிருந்த வாக்குசீட்டுக்களை பறித்து கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால், ராகினிக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் திரும்ப பெறப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்து. தனக்கு வெற்றிச் சான்றிதழை வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக போட்டி வேட்பாளர் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டதில் மனுதாரர் வெற்றி பெற்றது தெரிய வந்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் வனிதாவுக்கு சான்றிதழ் வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

மேலும் கூட்டரங்கில் ரகளையில் ஈடுபட்ட  மற்றொரு திமுக கவுன்சிலரான ராகினியின் தந்தைக்கு எதிராக பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தனர்.

திமுக தலைமைக்கு எதிராக போட்டியிட்டு, நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்ற திமுக பேரூராட்சி தலைவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.