சென்னை: குறைந்த பட்ச வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி, சென்னையின் 2 மண்டலங்களில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி அமைந்துள்ள திரு.வி.நகர் மண்டலத்திலும், தண்டையார்பேட்டை மண்டலத்திலும் இதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டி தெரிவித்துள்ளார்.
கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள மகாத்மா காந்தி 100நாள் வேலை உறுதித்திட்டத்தின் கீழ் (MGNREGA) தற்போது தினமும் ஊதியத்துடன் பணி வழங்கப்படுகிறது. இதற்கிடையே, நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை (TNUES) சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக இநத திட்டத்தை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி மற்றும் நிதியை தமிழக அரசு கோரியிருந்தது. இதற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் குறைந்தபட்ச ஊதியத் திட்டத்தை தண்டையார்பேட்டை, திரு.வி.நகர் மண்டலங்களில் சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கான பணியாற்றும் ஊழியர்களின் தினசரி ஊதியம் 382 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை துணை ஆணையர் (பணிகள்) எம்.எஸ்.பிரசாந்த் , முதல்கட்டமாக இந்த திட்டதிற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் வார்டு அளவில் செயல்படுத்தப்படும் என்றும், அதில் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியவர், இத்திட்டத்தின் கீழ் வரும் பணிகள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கினார்.
அதன்படி, , குளங்கள், குட்டைகள் மற்றும் கால்வாய்களை சீரமைத்தல், வழித்தடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல், நீர் நிலைகளை ஆழப்படுத்துதல், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், இணைப்பு வடிகால் மற்றும் வடிகால் அமைத்தல் போன்ற வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், உரம் மையங்கள் மற்றும் குப்பைகளை பிரிக்கும் வள மீட்பு மையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு போன்ற பணிகள், போக்கு வரத்து தீவுகள் மற்றும் நடைபாதைகளின் உருவாக்கம் ஆகியவை அடங்கும்.
இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு மண்டலங்களிலும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால் முதலில் தண்டையார்பேட்டை மற்றும் கொளத்தூரில் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். தேவையின் அடிப்படையில் இந்த திட்டம் மற்ற மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தும் என்றார்.
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால் போன்ற அவசரப் பணிகளை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மேற்கொள்ள இந்த திட்டம் சென்னை மாநகராட்சிக்கு உதவும் என தெரிவித்தார்.
இந்த நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒவ்வொரு மண்டலத்திலும் இதுவரை 50 முதல் 100 பேர் வரை, பதிவு செய்துள்ளதாகவும் இதை 500ஆக உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறிய பேடி, இந்த திட்டத்தின் மூலம், பெண்கள் அதிகப் பயனடைவார்கள் என்று என்று கூறினார். மேலும், இந்த திட்டத்தில், மற்ற மண்டலங்களிலும் நீட்டிக்க முயற்சிப்போம் என்று கூறியவர், இத்திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 85 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.