சென்னை: 4 நாட்கள் அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்ற விவகாரம் சர்ச்சையாக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்திற்கான தனி விமான செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில்,  துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டு சென்றார்.  முதல்வரான பின்னர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இதற்காக முதல்வர் சென்னையில் இருந்து தனி விமானத்தில், தனது மற்றும் மகன், மகள் குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார். முதல்வரின் பயணம் எதிர்க்கட்சியினரால் கடுமையாக விமர்சிக் கப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், துபாயில்  செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வரின் துபாய் பயணத்துக்கு விமானம் கிடைக்காததால், தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த தனி விமானத்துக்கான செலவை  தமிழக அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை திமுக ஏற்றுள்ளது என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். முதல்வரின் இந்த பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டும் இல்லை. கடைக்கோடி தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு வந்து உழைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினுடைய வளத்துக்காகவும்தான் என்று கூறியவர், உலக வர்த்தகப் பொருட்காட்சி முடியும்போதுதான் கூட்டம் அதிகம் வரும் என்பதால், இந்த நேரத்தில் அரங்கைத் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்பதை முதல்வர் உணர்ந்து தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

ஆனால், எடப்பாடி  பழனிசாமி முதல்வராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது என கேள்வி எழுப்பிய தென்னரசு, முதல்வர் ஸ்டாலினின் இந்த 3 நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ ரூ.6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து உள்ளதாக தெரிவித்தார்.

முதல்வருக்குக் கிடைக்கும் புகழையும், வரவேற்பையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இத்தகைய புழுதிகளை பழனிசாமி இறைத்துக் கொண்டிருக்கிறார்.‘

இவ்வாறு அவர் கூறினார்.