கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயில்
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயில். இங்கு மூலவர் கல் கம்ப வடிவில் காட்சியளிக்கிறார்.
அரியலூர் அருகே, சிதளவாடியில் 250 ஆண்டுகளுக்கு முன் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். வன்னிய குலத்தைச் சேர்ந்தவர். (உட்பிரிவு – படையாட்சி). இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை நிர்வகித்து வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்காததால் துயரமடைந்தார்.
மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் இறைவன் தோன்றி, “”அன்பனே! கவலைப்படாதே, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக் காண்பாய்,” எனக் கூறி மறைந்தார்.
காலையில் கோபாலனும் மங்கானும் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, அந்தப்பசு, தன்கன்றுடன் அம்மாவெனக் கதறியபடியே அவரிடம் வந்தது. பசு நின்ற இடத்தில் சாய்ந்து கிடந்த கம்பம் (கல் தூண் ) ஒன்றைக் கோபாலன் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. அக்கம்பத்தைக் கோபாலனும் மங்கானும், அவரது பணியாட்களும் வணங்கிவிட்டு, பசுவையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.
மறுநாள் மங்கான் கனவில் இறைவன் மீண்டும் தோன்றி, “பொய்ப்பொருளாம் உன்பசுவை அழைத்துச் சென்று, மெய்ப்பொருளாம் என்னைக் கைவிட்டாய், உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியமாட்டாய்.”
” திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, இங்கு கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டியின் அச்சு முறிந்ததால், என்னை அங்கேயே விட்டுவந்தார்கள். அதே கம்பம் தான் நீ காண்பது.”
“இதை நிலைநாட்டும் உரிமையும், கடமையும் உன்னுடையது. கம்பத்தை நிலை நிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் நான். கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் கலியுக பெருமாள்,” எனக் கூறி மறைந்தார்.
மங்கான, அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டைத் துவக்கினார். இதுவே கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலாக உள்ளது. (கிராமத்து மக்களிடையே “கலியுகப் பெருமாள்” பேச்சுவழக்கில் “கலியப் பெருமாள்” ஆகிப் போனார்)
விவசாயிகளின் பிரார்த்தனை தலம்: விளைநிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டிக்கொண்டு, பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர். நோயுற்ற கால்நடைகள் குணமாவதற்கு வேண்டும் பக்தர்கள், முதல் கன்றைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
சிறப்பம்சம்:
மூலஸ்தானத்தில் 12 அடி உயரக் கல் கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கிக் கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராகக் கருதி பூஜை நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசியன்று, உற்சவமூர்த்தி பவனி நடக்கும். தாயாருக்கு உற்சவர் கலியுக வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். தசாவதார மண்டபத்தில் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளது. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது.
தலவிருட்சம் மகாலிங்கமரம் ஆதிகாலத்திலிருந்தது போலவே இன்றும் தளிர்த்துச் செழித்து காட்சி தருகிறது.
திருவிழாக்கள்:
தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, அட்சயதிருதியையன்று சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா, வைகாசி விசாகத்தன்று சுவாமி வெள்ளிக்கருட வாகனத்தில் வீதியுலா, ஆடிப்பெருக்கு, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி, ஸ்ரீ ராமநவமியன்று தேரோட்டம், பங்குனி உத்திரம்.
அரியலூரிலிருந்து இரும்புலி கிராமம் செல்லும் ரோட்டில் ஆறு கி.மீ.,தூரத்தில் கல்லங்குடி உள்ளது. மினி பஸ், ஆட்டோ வசதியுள்ளது.