சென்னை: கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளது, ஓ.பி.எஸ். உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
அதிமுகவை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். ஏற்கனவே மாவட்டம் வாரியாக சென்று அதிமுக தலைவர்களை சந்தித்த நிலையில், தற்போது மாவட்டம் மாவட்டமாக ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 17-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் திருக்கோயில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில், கும்பகோணம் சூரிய பகவான் ஆலயம், நாகநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தஞ்சைக்கு சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, பல இடங்களில் அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேசினார்.
இதையடுத்து திருச்சி விமான நிலையம் வந்தவர், அங்கிருந்து இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள்வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சென்னைதியாகராய நகர் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கோயில்களில் தாம் தரிசனம் செய்ததாகவும், பொதுமக்கள் தன்னிடம் அன்போடு பழகியது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், ஓபிஎஸ் வாக்குமூலம் தொடர்பாக கேள்விகளை தொடுத்தனர். அதற்கு பதில் கூறியவர், கடவுளுக்குத் தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். உண்மை காலதாமதமாக வரலாம்; ஆனால் உண்மையை திரையிட்டு யாரும் மறைக்க முடியாது என கூறினார்.
மேலும், கட்சி தொண்டர்கள்தான் அ.இ.அ.தி.மு.க.வின் ஆணிவேர் என்றும், புரட்சித்தலைவர் கட்சியை ஆரம்பித்த அன்றே சட்டவிதிகளில் அதைத்தான் தெரிவித் திருப்பதாகவும் சின்னம்மா கூறினார். கழகத் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும் என்றும், அதில தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.