சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் ‘எனக்கு தெரியாது’, ‘எனக்கு தெரியாது’ என கூண்டில் வளர்க்கப்படும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லி வருகிறார். இதன் காரணமாக அவரிடம் இன்று 2வது நாளாக ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக 9முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ், 10வது முறை அனுப்பப்பட்ட சம்மனுக்கு நேற்று ஆஜர் ஆனால். அப்போது ஆணையம் தரப்பில் அடுக்கடுக்கான கேள்விகள் முன் வைக்கப்பட்டது. இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன அதற்கு பதில் அளித்தவர், பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.துணை முதல்வர் என்ற முறையில் ஆணையத்தின் கோப்பில் தான் கையெழுத்திட்டதாகவும் தகவல் வெளியாகியது.
மேலும், ”மருத்துவமனையில் காவிரி விவகாரம் குறித்து ஜெயலலிதா நடத்திய ஆலோசனை கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக அறிக்கை வந்த பின்பே, அக்கூட்டம் குறித்து எனக்கு தெரிய வந்தது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விஜய பாஸ்கரிடம் தான் கேட்டறிந்தேன்”,என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிகளை அகற்ற கூறவில்லை என்றும் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானது எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான கேள்விக்கு எனக்கு தெரியாது எனக்கு தெரியாது என்றே அவரது பதில்கள் இருந்தன. நேற்று காலை, மாலை என பல மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 2வது நாளாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.