சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  23.03.2022 முதல் 25.03.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையானதுஇன்றும் நாளையும்  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

21.03.2022,: அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.03.2022: மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23.03.2022: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக்கடல், வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்/

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.