கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர் சுப்பையா நங்கநல்லூரில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராகவும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு தலைமை மருத்துவராகவும் இருந்தவர் டாக்டர் சுப்பையா.

2020 ம் ஆண்டு ஜூலை மாதம் நங்கநல்லூரில் தனது பக்கத்துவீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது மட்டுமல்லாமல் கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் முக கவசம் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளையும் மூதாட்டி வீட்டு வாசல் முன் போட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டு முன்பு ஆர்பாட்டம் நடத்திய ஏ.பி.வி.பி. அமைப்பினரை தூண்டிவிட்டதாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், தனியாக இருந்த பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் பார்க்கிங் பிரச்சனை காரணமாக தகராறு செய்து, தொல்லை கொடுத்ததாக நிலுவையில் உள்ள வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுப்பையா கைதை தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தவருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக கூடுதல் ஆணையரிடம் மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகார் அளித்த நபருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.