கொல்கத்தா

கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சோனாகாச்சி பகுதியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடுமையான ஊரடங்கு அமலிலிருந்தது.   நாட்டில் ஏற்பட்ட கொரோனா முதல் மற்றும் 2 ஆம் அலை பரவலால் மக்கள் மிகவும் அவதியுற்றனர்.   இதையொட்டி அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் மக்கல் இயல்பு வாழ்க்கை அடியோடு முடக்கியது.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.  இதையொட்டி நாடெங்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.   கடந்த 2 ஆண்டுகளாக நாட்டில் அனைத்து தொழில்களும் முடங்கின.   இதனால் கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சோனாகாச்சி முழுவதுமாக முடங்கியது.

தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு சோனாகாச்சியில் ஹோலி கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன.  இங்கு வசிக்கும் பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவி விசாகா லஸ்கர், “நாங்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பதால் வெளியே சென்று, மற்ற சமூகத்தினருடன் இணைந்து பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது.

ஒவ்வோர் ஆண்டும், சோனாகாச்சி சிவப்பு விளக்கு பகுதியில் பல்வேறு கொண்டாட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம்.  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை.  இந்த முறை ஹோலி கொண்டாடுவதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” எனக் கூறியுள்ளார்.