டெல்லி: இந்திய ஜனநாயகத்தில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் தலையீடு தடுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் விதிமுறையை மீறி முகநூலில் பிரசாரம் செய்வதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகின்றன. இன்றைய அமர்வில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இந்திய ஜனநாயகத்திற்குள் சமூக ஊடகங்கள் ஊடுருவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
இந்தியா உட்பட ஜனநாயக நாடுகளின் தேர்தல் முடிவுகளின் மீது சமூக ஊடக ஜாம்பவான்கள் பொது உரையாடலில் செல்வாக்கு செலுத்துவது மற்றும் தேவையற்ற செல்வாக்கை செலுத்துவது போன்ற வளர்ந்து வரும் நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் கதைகளை வடிவமைக்க சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தார். சமூக ஊடங்களால், “இளம் மனங்கள் வெறுப்பால் நிரப்பப்படுகின்றன. அதனால், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங் களின் தலையீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்,” என்று கூறினார்.
“நமது ஜனநாயகத்தை ஹேக் செய்ய சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதுடன், தலைவர்கள், கட்சிகள் மற்றும் அவர்களின் பினாமிகளால் அரசியல் கதைகளை வடிவமைக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன,” என்றும் குற்றம் சாட்டினார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி, அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுப்பதற்காக தனது சொந்த விதிமுறைகளையே முகநூல் மீறியுள்ளது ஆளும் கட்சியின் துணையுடன் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அப்பட்டமான செயலில் முகநூல் ஈடுபட்டுள்ளது நமது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது.
போலி விளம்பரங்களால் இளம் மற்றும் முதியவர்களிடம் வெறுப்பூட்டும் கருத்துகளை முகநூல் கொண்டு செல்கிறது. இதனால், அந்நிறுவனம் லாபம் ஈட்டுகின்றன. “உலகளாவிய சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்து தரப்பினருக்கும் சமமான களத்தை வழங்கவில்லை என்பது பலமுறை பொதுமக்களின் கவனத்திற்கு வந்து உள்ளது. கடந்தாண்டு சர்வதேச இதழில் வெளியான செய்தியில், முகநூல் தனது விதிமுறையை ஆளும் கட்சிக்காக மீறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
யார் ஆட்சியில் இருந்தாலும் ஜனநாயகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்றும், தனக்கு உரையாற்ற அனுமதி அளித்த சாபாநயகருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி அமர்ந்தார்.
ஏற்கனவே கடந்தர 2019 லோக்சபா தேர்தலின் போது, சமூக ஊடக தளங்களில் சட்டத்தை மீறி, பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) விளம்பரப்படுத்தும் வகையில் பேஸ்புக் விளம்பரங்களை வெளியிட்டதாக அல் ஜசீரா வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை கூறியுள்ளது. அத்துடன், பாஜக வெளியிட்ட வீடியோ வடிவில் இருந்த விளம்பரங்கள் ஃபேஸ்புக்கின் விளம்பர நூலகத்தில் இடம்பெற்றன. சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களைப் படிக்கும் ஆராய்ச்சித் திட்டமான தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் மற்றும் ad.watch ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் விளம்பரதாரர்கள் “தங்கள் அடையாளங்களை அல்லது BJP உடனான தங்கள் தொடர்பை மறைத்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.