சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
தமிழக பட்ஜெட் வரும் 18ந்தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். இது தொடர்பாக வும், 2வது முறையாக நீட் விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்தும் முதல்வர் ஆளுநருடன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
முதல்வருடன், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நவாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர் அதிகாரிகளும் சென்று, ஆளுநரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, நிலுவையில் இருக்கும் நீட் உள்பட மற்ற சட்ட முன்வடிவுகள் மீதும், நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியதாகவும், அப்போது, நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் முதல்வரிடம் உறுதி அளித்துள்ளதாகம் கூறப்படுகிறது.