சென்னை: ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிக கவனம் செலுத்துங்கள் எனமாவட்ட ஆட்சித் தலைவர்கள்  இரண்டாம் நாள் கூட்ட நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆற்றிய உரையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுக் கான மூன்று மாநாடு 10ந்தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்றைய 2வது நாள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள்தான் நம் அனைவருக்கும் எஜமானார்கள் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்றும்,  மக்களுக்காக செலவிடப்படும் நிதி, 100 சதவீதம் அவர்களை சென்றடையச் செய்யக்கூடிய நிர்வாகம்தான் சிறந்த நிர்வாகம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும், அதனை மனதில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் மாலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கான மாநாட்டில் நிறைவு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களையும் மாநிலத்திலேயே சிறந்த மாவட்டங்களாக உருவாக்க ஆட்சியர்கள் உழைக்க வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

உள்ளடக்கிய வளர்ச்சி என்பதையொட்டி மாவட்ட நிர்வாகம் செயல்படவேண்டும்; நேரடி ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்; பெருமளவு நிதி ஒதுக்கி அறிவிக்கும் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்வதாய் உங்கள் பணி அமையவேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியதுடன்,  குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பேரிடர் காலங்களில் மக்களை காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் , ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் ஆட்சியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும், விளிம்புநிலை மனிதர்கள், சிறுபான்மையினர், பட்டியலின பழங்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.