சென்னை: முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நடைபாலம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல் பாலம் கட்டுவதற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ரெண்டர் கோரி உள்ளது. அதற்காக ரூ.37 கோடி திட்டமிடப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், `கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொங்கு பாலம்அமைக்கப்படும்” என கூறியிருந்தார். ஆனால், அப்போது தொங்குபாலம் குறித்து சலசலப்பு ஏற்பட்டது. திருவள்ளுவர் சிலையைத் தாங்கிக்கொண்டிருக்கும் பாறை மிகவும் சிறியது. அதில் பல டன் எடை கொண்ட கற்கள் அடுக்கப்பட்டு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்பதால், தொங்குபாலம் அமைத்தால் திருவள்ளுவர் சிலைக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்ததிட்டத்தை தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு கையில் எடுத்துள்ளது. அதற்காக ரூ.37 கோடி ஒதுக்கி, நடைபாலம் அமைக்க உள்ளதாக அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பில், கன்னியாக்குமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல் பாலம் கட்டுவதற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த, டெண்டர் 04.05.2022 14.00 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே திருநெல்வேலி வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் (H), C&M மூலம் பெறப்படும். பணிகளின் விவரங்கள்,பணிகளின் தோராயமான மதிப்பு, EMD, டெண்டர் ஆவணங்களின் இருப்பு மற்றும் அனைத்து விவரங்களும் 14.03.2022 முதல் அரசு இணையதளத்தில் https://tntenders.gov.in/ இல் கிடைக்கும்.டெண்டரில் ஏதேனும் மாற்றங்கள் / திருத்தங்கள் இருந்தால்,அது அரசு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.