சென்னை:
புனித வெள்ளி நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழா இது. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் இந்த தினத்தை தவறாது கடைபிடித்துவருகின்றனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநில சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து தரப்பினரும் இயேசு பிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையினை துக்கநாளாக புனித வெள்ளியாக அனுஷ்டிக்கின்றனர்.

அன்றைய தினம் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் தியாகதை நினைவு கொள்ளும் வகையில் உண்ணாநோன்பிருந்தும் ரத்த தானம் செய்தும் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

உலக வரலாற்றை இரண்டாக பிளந்த, இந்த மகத்தான தியாகத்தை அங்கீகரிக்கின்ற வகையில் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன். அத்தகைய அறிவிப்பு இயேசுவின் தியாகத்திற்கு சிறப்பான அஞ்சலியாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.