வாஷிங்டன்: கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மனச்சோர்வு, மனஅழுத்தம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்து உள்ளார். மேலும், இது இளைய சமுதாயத்தினரிடையே 25% அளவுக்கு அதிகரித்து உள்ளதாகவும், குறிப்பாக இளம்பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கி கொரோனா பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளை கடந்தும், தடுப்பூசி போன்ற நடவடிக்கை காரணமாக கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், அடுத்த 4வது அலை உருவாகும் என சில ஆய்வுகளும், இனிமேல் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என சில ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. தற்போதுதான் உலக நாடுகளியே சற்று நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டு, இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றால் ஏராளமானோர் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகதாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள, உலக சுகாதார அமைப்பு தலைவர அதோனம், கொரோனா தொற்று பரவலை தடுக்க போடப்பட்ட ஊரங்கால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், பல நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டதுடன், கொரோனா தொற்று பாதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் மனநல பாதிப்புக்கு ஆளானோர் அதிகரித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களிடையே மனஅழுத்தம் அதிகமாக காணப்படுகிறது. நோயின் காரணமாக கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, உலக நாடுகள் மக்களின் மனநல ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதாரத்துறையின் தொற்று நோய் துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 தொற்றுநோய் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளதாகவும், அவர்கள் தற்கொலை மற்றும் சுய-தீங்கு விளைவிக்கும் நடத்தைகளுக்கு விகிதாசாரமாக ஆபத்தில் இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
“ஆஸ்துமா, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற ஏற்கனவே இருக்கும் உடல் ஆரோக்கிய நிலைமைகள் உள்ளவர்கள், மனநல கோளாறுகளின் அறிகுறிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று அறிக்கை கூறுகிறது.
ஏற்கனவே இருக்கும் மனநலக் கோளாறுகள் உள்ளவர்கள் கோவிட்-19 க்கு விகிதாச்சாரத்தில் பாதிக்கப்படுவதில்லை என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர், இருப்பினும், இந்த நபர்கள் பாதிக்கப்பட்டால், அவர்கள் மனநலம் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், கடுமையான நோய் மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால், மனநல ஆதரவு அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய நாடுகள் அவசரமாகச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.