டலூர்

டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாது எனத் திரையரங்குகளுக்கு பாமக எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்து நடித்திருந்த ஜெய்பீம் திரைப்படத்தில் காவல் உதவி ஆய்வாளர் வன்னியர் ஆக சித்தரிக்கப்பட்டு இருந்தார். பாமக சார்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இதையொட்டி தொடர்ந்து அவரை வன்னியராக காட்டும் அக்கினி குண்ட காலண்டர் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

வரும் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தைக் கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் வெளியிடக் கூடாது என பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  இக் கடிதம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் விஜயவர்மன் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான வாக்கிய பிழைகளுடன் எழுதப்பட்டிருக்கும் அக்கடிதத்தில், சூர்யா வன்னியர்களிடம் பொது மன்னிப்பு கேட்கும்வரை அவரது படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த பாபா படம் வெளிவந்த போது பாமக ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் படத்தைத் திரையிட விடாமல் பாமகவினர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவங்கள் நிகழ்ந்தன.  எனவே அதுபோன்ற அசம்பாவிதங்கள் எதற்கும் துணிந்தவன் படத்துக்கும் நேருமோ என்ற அச்சத்தை இந்தக் கடிதம் ஏற்படுத்தியுள்ளது.