மதுரை: மதுரையில் 17 வயது சிறுமி உயிரிழப்பு தொடர்பாக அவரது காதலன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமிக்கு போதை ஊசி போட்டு, கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டதாக, மதுரையில் பொதுமக்கள் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இது வன்முறைக்களமான நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். பலரை கைது செய்தனர்.
மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியைச் சேர்ந்த 14 வயது பெண் ஒருவர் பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தன்று தனது இஸ்லாமிய காதலனோடு வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் சிறுமியை தேடி வந்த நிலையில்,அவர் கிடைக்காததால், பிப்ரவரி 24ந்தேதி மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் சிறுமியின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து பிப்ரவரி 24ம் தேதி வழக்குபதிவு செய்து காவல் துறையினர் 3 தனிப்படை அமைத்து தேடி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அந்தச் சிறுமியை மயங்கிய நிலையில் அந்த இளைஞனின் தாய், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டு வந்த சிறுமியை அவரது பெற்றோர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப் பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
சிறுமிக்கு போதை மருந்து ஏற்றி கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டதால்தான் அவர் இறந்துள்ளதாக தகவல்கள் பரவின. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அதன்பிறகே, அந்த சிறுமியை அழைத்துச்சென்ற தும்பைபட்டியை சேர்ந்த இளைஞர் நாகூர் ஹனிபா, அவரது தந்தை சுல்தான், அவனது தாய் மதினா சகோதரர் ராஜாமுகமது உறவினர்களான ரம்ஜான்பேகம், சாகுல் ஹமீது உள்ளிட்ட 8 பேரை மேலூர் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உயிரிழந்த 17 வயது சிறுமி, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக வில்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர், . சிறுமியை ஈரோட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு நாகூர் ஹனிபாவும், அந்த சிறுமியும் ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும், சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார்.
தங்களது விவகாரம் வெளியே தெரிந்து, போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது வீட்டில் நாகூர்ஹனிபாவின் தாயார் விட்டுசென்றுள்ளார். ஆனால், மதுரை சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கூட்டுப் லியல் வல்லுறவு நடக்கவில்லை, உடலில் எந்தவித காயமும் இல்லை என்பதும் கையில் குளுகோஸ் ஏற்றியதற்கான தடயமே உள்ளது எனவும் மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
சிறுமி கடத்தல் வழக்கில் நாகூர் ஹனிபா, தாய், தந்தை, உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர், போக்சோ சட்டத்தின் கீழும், கடத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்ததுடன், சிறுமி உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றப்பட்டுள்ளது எனவும், போலீசார் இந்த வழக்கில் போதிய கவனத்துடன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பெற்றோருக்கு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். அப்பகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்புக்கும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
ஆனால் காவல்துறையினரின் விளக்கத்தை சிறுமியின் பெற்றோரும், அவரது ஊர்க்காரர்களும் ஏற்க மறுத்து வருகின்றனர்.அத்துடன் பாஜகவினரும் களத்தில் குதித்துள்ளனர். 17வயது சிறுமியை ஏமாற்றி அந்த சிறுவன அழைத்து சென்றுள்ளான் என்றும், அதற்கு அவரது உறவினர்கள் உடந்தையாக இருந்துள்ளனர், கடந்த 15 நாட்களாக இதுகுறித்து அவரது பெற்றோரும் ஏதும் தெரிவிக்கவில்லை. இது லவ் ஜிகாத் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை திடீரென தும்பைப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். அப்போது மர்ம நபர்கள் சிலர் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி, தும்பைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பேருந்து மீது கல் மற்றும் கட்டைகளால் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சிதறியது. கண்ணாடி சிதறிலில் உள்ளே இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மற்றும் வருவாய்த்துறையினர், தும்பைப்பட்டி பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் பொதுமக்கள் கலையாததால், காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். பலரை கைது செய்த காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி பதற்றமாக காணப்படுகிறது.
சிறுமி உயிரிழந்தது ஏன் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.