சென்னை: தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகள் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், இதனால் தேவையற்ற இடையூறகள் ஏற்படுவதாகவும், ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் அனுமதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,, “மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று கூறினார். அத்துடன், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்த வழக்கும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ அலுவலர் எஸ்.பி நிர்மலா தேவி, டி.எஸ்.பி சந்தோஷ்குமார், டி.எஸ்.பி ஆகாஷ்குமார் உள்பட நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வனத்துறை அனுமதிக்கக் கூடாது” என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.