சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள சேர்மன் பதவிகளில் கூட்டணி தர்மத்துக்கு எதிராக, திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கட்சி முன்னணி தலைவர்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, நகராட்சி, பேருராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவிகளில் சில கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது. ஆனால், பல இடங்களில் திமுகவினரே, கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், திமுக சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட போட்டியாளர்களை ஓரங்கட்டி கட்சி உத்தரவை மீறி சிலர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக ஒரே கட்சியினர்களுக்கு இடையே மோதலும் நடைபெற்றுள்ளது. இதுவும் திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு திருமாவளவன் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய வைத்து ‘கூட்டணி அறத்தைக்’ காத்திட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என காட்டமாக கூறியுள்ளார்.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோபி செட்டிபாளையம் நகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, அங்கு திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
பொ.மல்லாபுரம் பேரூராட்சி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது, அதிலும் திமுகவைச் சேர்ந்தவர் வெற்றிபெற்றுள்ளார்.
நெல்லிகுப்பம் நகராட்சி தலைவர் பதவியும் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது அங்கும் திமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார்.
இதே போல் மேலும் சில இடங்களில் திமுகவினர் கட்சி கட்டுப்பாட்டை மீறி கூட்டணிக் கட்சியனரை தோற்கடித்துள்ளனர்.
இதனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திமுக தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ், விசிக கோபம்: பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளின் தலைவர் பதவிகளை தட்டிப்பறித்த திமுக….