நியூயார்க்: உக்ரைன் மீதான ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கிய கடந்த 6 நாளில் 6,60,000 பேர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. உடனே போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேட்டோ விவகாரத்தில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இன்று 7 வது நாளாக உக்ரைனின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் இருநாடுகளுக்கும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உக்ரைனின் பொருளாதார மண்டலமாக உள்ள கெர்சன் நகரை முழுமையை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

ஆனால், உக்ரைன் அதிபர்  கடந்த 6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைன் மீதான போர் காரணமாக, அந்நாட்டு மக்கள் உள்பட அங்கிருந்த வெளிநாட்டினரும் வெளியேறி வருவதாக கூறியுள்ள ஐ.நா. போர் தொடங்கி கடந்த 6 நாட்களில் மட்டும் போருக்கு மத்தியிலும்  6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி உள்ளனர், அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் இதுவரை 350 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷியாவுக்கு அறிவுறுத்தி உள்ளது.