சென்னை: தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்க, முதல்வராக பதவி ஏற்ற பிறகு, தனது  முதல் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மேற்கொள்ள இருக்கிறார். இந்த மாதம் இறுதியில்  துபாய் பயணமாகிறார்.

தமிழ்நாட்டை தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயலாற்றி வருகிறது. கடந்த ஆண்டு முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், தொழில்துறை சார்பில், வெளிநாடு மற்றும் வெளிமாநில முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி அனறு  தமிழ்நாட்டில், மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் மாநாடு நடைப்பெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேட்டையும் வெளியிட்டார். இப்படி பல்வேறு வழிகளில் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில், மேலும் முதலீடூகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் செல்கிறார். துபாயில்  192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி, விவசாயம், சிறுதொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

இதையொட்டி, இந்த கண்காட்சியை காணவும் தொழில் மூதலீட்டை ஈர்க்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மார்ச் மாதம் துபாய் செல்கிறார்.  மார்ச் 26, 27 ஆம் தேதி முகாமிடும் மு.க.ஸ்டாலின் கண்காட்சியில் பாவையிடுவதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளிநாட்டு தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.