சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருடு போன மயில் சிலை தெப்பக்குளத்தில் புதைக்கப்பட்டு உள்ளதாக சென்னை  உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பிறகு அங்குள்ள   புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த புராதன மிக்க மயில் சிலை மாயமாகி வேறு ஒரு மயில் சிலை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில்,  போலீஸாரின் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிடக்கோரியும், அதுபோல அறநிலையத் துறை அதிகாரிகளின் உண்மை கண்டறியும் குழு விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தக்கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  கடந்த விசாரணையின்போது,  உண்மை கண்டறியும் குழுவின் நிலவரம் என்ன என்பது குறித்து ஆஜராகி விளக்கமளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டி ருந்தனர்.

அதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹசன்முகமது ஜின்னா, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை திருடு போனது தொடர்பான விசாரணையில், அந்த சிலையானது கோயில் குளத்தின் அடியில்  புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோவில் குளத்தை தோண்டுவதற்குப் பதிலாக, அங்கு சிலைகள் புதைக்கப்பட்டதா என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியதுடன், குளத்தில்  அதிக சேதம் ஏற்படாமல் அவற்றை வெளியே எடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியைப் பெற காவல்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  புன்னைவன நாதரை வழிபடுவதற்கு அசல் மயில் மலர்களைப் பயன்படுத்தியதாக புராணக் கதைகள் தெரிவித்துள்ளன.  புராணக்கதையின்படி, மயில், பாம்பை அதன் கொக்கில் சுமந்து செல்லும். ஆனால்,  தற்போதைய போலி மயில் சிலைக்கு பதிலாக, அதன் கொக்கில் பூ ஏந்திய மற்றொரு சிலையை வைக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மயிலாப்பூர் குளத்திலோ அல்லது வேறு இடத்திலோ மூல விக்கிரகத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கலாம் என்றும்,  அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிய சிலையை உருவாக்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.