சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில திமுக அரசை  கண்டித்து மாவட்ட தலைநகரங்களில்  இன்று (பிப்.28-ஆம் தேதி) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி  19 ஆம் தேதி நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது,  கள்ள ஓட்டு போட முயன்ற கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அரை நிர்வாணமாக இழுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது மனித உரிமை மீறியல் செயல் என்றும், தான் தாக்கப்பட்டதாகவும் நரேஷ் கொடுத்த புகார் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அதிமுக சார்பில், திமுக அரசின் அராஜகத்தை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இதுகுறித்து ஒபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆளும் திமுக-வின் கையாளாகாத் தனத்தையும்,ஆளும் திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மக்களுக்குத் தெளிவாகப் புரிகின்ற வகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமாக செய்திகளைத் தந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதைக் கண்டித்தும்,

பிணையில் வரமுடியாத அளவிற்கு தொடர் வழக்குகளை அவர் மீது புனைய முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,இன்று (பிப். 28-ஆம் தேதி)   தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளது.

அதன்படி,இன்று (பிப். 28-ஆம் தேதி)  காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது.