ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், அதை இயக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானம் ஒன்று பயிற்சியின்போது இன்று பிற்பகலில் தெலுங்கானா மாநிலத்தில் பெத்தவூரா மண்டலத்தில் உள்ள ராமண்ணகுடம் தாண்டா என்ற இடத்தில் இந்த விபத்துக்குள்ளானது. விமானம் தரையில் விழுந்தவுடன் பெரும் சத்தத்துடன் அப்பகுதியில் புகை எழுந்துள்ளது. இதனால், அச்சமடைந்த அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்தவரை மீட்டனடர்.
ஆனால், துரதிருஷ்டவசமாக அதில் இருந்த பெண் விமான உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த பெண் விமானியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அந்த பெண் விமான பேர் மகிமா என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. விபத்துக்குள்ளான பயிற்சி விமானம், தெலுங்கானா மாநிலம், நாகார்ஜூனாசாகரில் உள்ள விஜயபுரி தெற்கு விமான அகாதமியைச் சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும், நல்கொண்டா காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி விபத்துக்குள்ளானது ஒரு இருக்கை கொண்ட விமானம் எனவும் நாகர்ஜூனாசாகரில் இருந்து ஹைதராபாத் நோக்கி இவ்விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, 133 கிலோ-வாட் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகே வந்தபோது விபத்து நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.