சென்னை: குழந்தைகளை பாதிக்கும் போலியோ நோயில் இருந்து காக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (பிப்.27-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு போட்டுக்கொள்ளும்படி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் நாளை  போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மட்டுமல்லாமல் பள்ளிகளிலும், மக்கள் கூடும் பகுதிகளிலம்  போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெம் என தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் மொத்தம்  43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்  நடைபெறும் எனவும், இதன்மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் சுமார்  47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு  இருப்பதாக கூறியவர், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி முகாம் நடைபெறும் என்றும், சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் , பெற்றோர்களும் அதை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.