நியூயார்க்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவை கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா, சீனா உள்பட சில நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தர முன்வராத நிலையில், தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தோல்வி அடைய செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்த்துள்ளன. அதேநேரம் சில நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், ரஷியாவோ தனது போர் தாக்குதலுக்கு, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறி வருகிறது. ரஷியா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்,, கடந்த இரண்டு நாள்களாக உக்ரைன் மீது ரஷியா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கி உள்ளது. ரஷிய அதிபரும் உக்ரைன் கைப்பற்ற அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், ரஷியாவின் நடவடிக்கை கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தில், ரஷ்யா உடனடியாக நிபந்தனை யின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்து ராணுவப் படைகளையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான அமெரிக்க தூதர், ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல் மிகவும் தைரியமானது, மிகவும் வெட்கக்கேடானது, அது நமது சர்வதேச அமைப்பை அச்சுறுத்துகிறது என்று சாடினார். யுகே தூதரர் பேசும்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது மிகப்பெரிய படையெடுப்பை தொடங்கியுள்ளார். இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்று தனது நாட்டின் கருத்தை பதிவு செய்தார்.
சீனா தரப்பில் அந்நாட்டின் பிரதிநிதி பேசுகையில், அனைத்து மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும் ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம், உக்ரைன் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பாலமாக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வளியாகி உள்ளது.
இந்திய தரப்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி பேசுகையில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சம்பவங்களால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மனித உயிர்களை விலையாக வைத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது. உக்ரைனில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்களை உள்ளடக்கிய இந்திய சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். அனைத்து உறுப்பு நாடுகளும், ஆக்கபூர்வமான வழியைக் கண்டுபிடித்து தான் இந்தக் கொள்கைகளை மதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதற்கான ஒரே பதில் உரையாடல் மட்டுமே, இருப்பினும் இந்த நேரத்தில் அது அச்சுறுத்தலாகத் தோன்றலாம். அரசின் ராஜாந்திர வழிகள் கைவிடப்பட்டது வருத்தம் அளிக்கிறது. நாம் அதற்குத் திரும்ப வேண்டும். இந்த அனைத்து காரணங்களுக்காகவும், இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது” என்றார்.
ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் இந்த தீர்மானத்தில் மீது உறுப்பு நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா உள்பட 11 நாடுகள் மட்டுமே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் முடிவை எடுப்பதாக் தெரிவித்திருக்கிறது.
15 நாடுகளில், 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தும், ரஷ்யாவுக்கு எதிரான இந்த தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. காரணம், ரஷ்யா தனக்கு உள்ள `வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. எனினும் உலக அரங்கில் ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது என்பதை இந்த தீர்மானம் உணர்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கவுன்சிலின் அமைப்பு காலாவதியானது என்றும், அது உலகின் பல பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தத் தவறிவிட்டது என்றும், சீர்திருத்தங்களுக்கான அழைப்புகளைத் தூண்டுகிறது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.