மதுரை கூடல் அழகர் கோயில்
தென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் ஒரு வைணவத் திருக்கோயிலாகும். இங்கு மகாவிஷ்ணுவின் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே பிரமாண்டமாக வடிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த கோயிலில் மகாவிஷ்ணு நின்ற, அமர்ந்த மற்றும் சாய்ந்த நிலைகளில் காட்சியளிக்கின்றார். ராமர் பட்டாபிஷேகத்தைச் சித்தரிக்கும் மரச்சிற்ப அலங்கரிப்புகளையும் இக்கோயிலில் பார்க்கலாம்.
மதுரைக்கு விஜயம் செய்யும் ஆன்மீகப்பிரியர்கள் தவறாது தரிசிக்க வேண்டிய கோயில்களில் கூடல் அழகர் கோயில் ஒன்றாகும்.
பொதுவாக சைவ சமய கோயில்களில் மட்டுமே நவக்கிரக சன்னதி இருக்கும். வைணவ சமய கோயில்களில் நவகிரகங்களுக்குப் பதிலாக, சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கும். வைணவ ஸ்தலமான இக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது.
சிறப்பு
மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம்.இதன் நிழல் தரையில் விழுவதில்லை. பாண்டியனின் ஐயம் தீர்த்து மதுரையில் பொற்கிழி அறுத்த[8] பெரியாழ்வார் இக்கோயிலில் இருந்த அந்தர வானத்து எம்பெருமானின் கோலம் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்.
ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.
கோவில் அமைப்பு
அஷ்டாங்க விமானத்தின் கீழ்த்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.உற்சவர் வியூக சுந்தர்ராஜப் பெருமாள்.