டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, மார்ச் 9ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே ராமர் பாலம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைசகளும் நீடித்து வருகின்றன. கடந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது, கடல்வழி வர்த்தக போக்குவரத்து ஏற்படுத்துகின்ற வகையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த முனைந்த போது, ராமர்பாலம் அகற்றப்பட வாய்ப்பு எழுந்தது. இதற்கு நாட்டு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. மேலும், அப்போதைய மத்தியஅரசுக்கு எதிராக, கடந்த 2007ஆம் ஆண்டு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் 2020ஆம் ஆண்டில் இன்னொரு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றங்களும் முடங்கியதால், அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கடந்த ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்னர், புதிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இந்த வழக்கை விசாரிப்பார் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தனது மனுமீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். சுவாமியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதிஎன்.வி. ரமணா, இந்த மனு மீது மத்திய அரசு பதில் அளித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடந்த காலங்களில் அரசு பதில் அளித்துள்ளதாக சுவாமி தெரிவித்தார்.
மனுவை பரிசீலித தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் மார்ச் 9-ம் தேதி மனு மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.