சென்னை: முன்விரோதம் காரணமாக அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் மனைவி சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். அதுபோல சென்னை மாநகராட்சி 23-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ராஜன் 3,953 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 19ந்தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவே நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் திமுக 33 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 12 வார்டுகளிலும் திமுக வென்றுள்ளது. அதிமுக 2 வார்டில் வென்றுள்ளது. மற்ற இடங்கள் எதிலும் அதிமுக எங்கும் முன்னிலை வகிக்கவில்லை.
சென்னை மாநகராட்சி 174-வது வார்டில் திமுக வென்றது. இங்கு 2-வது இடத்தை பாஜக பிடித்தது. 3-வது இடத்தில் அதிமுக உள்ளது. அதேபோல் வார்ட் 54ல் பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அங்கு இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை. சென்னையில் இன்னும் 3 வார்டுகளில் பாஜக அதிமுகவை விட முன்னிலை வகிப்பதாக முதல்கட்ட தகவல்கள் வருகின்றன.
சென்னையில் சில வார்டுகளில் அதிமுகவை பாஜக ஓவர் டேக் செய்துள்ளது. அதிமுக சென்னையில் எதிர்பார்த்ததை விட மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது.
பாஜக 5 வார்டுகள் வரை 2ம் இடம் பிடித்துள்ளது.
இதற்கிடையில், பிப்ரவரி 1ஆம் தேதி மடிப்பாக்கத்தில் 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் செல்வம் மனைவி, சமீனா, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.